Friday, 31 August 2012

"குரு வணக்கம்" - 5

பாடல் :
"அங்கையிற்கண்  ணாடிபோல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச் சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமணியப்படமெடுத்  தாடாய்  பாம்பே".

பொருள் :
ஒருவன் கையில் உள்ள கண்ணாடி எப்படி அவன் உருவத்தை
பிரதிபலித்து காட்டுகின்றதோ , அதைப்போல இந்த
உலகத்தையும் ,இந்த உலகில் உருவான மனிதன் முதல்
அனைத்து சீவ ராசிகள் ,தாவரங்கள் உருவான உண்மையையும் ,
அவைகளின் "விதி" ரகசியத்தையும் , பூமிக்கு நவகோள்களால்
உண்டாகும் தாக்கத்தையும், இந்த பூமியில் நடக்கும்
செயல்களுக்கு நிர்ணயக்கப்பட்ட மாற்ற முடியாத  விதி
அமைப்பினையும்  உலக மக்களுக்கு  தெளிவாக  கூறி  விளங்கச் செய்த குருவே !

என் மனம் , மெய் , வாக்கு இவைகளால் உங்கள் திருவடியை
போற்றி பணிந்து வணங்குகின்றேன்.        

"குரு வணக்கம்" - 4

பாடல் :
"உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
 உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
 கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
 களித்துக்க ளித்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
பூவுலகில் பிறந்த மனிதர்கள் உண்மை ஞானத்தையும்
தங்கள் பிறப்பின் ரகசியத்தையும் தன் விதி அமைப்பு
அதனால் உண்டாகும் வாழ்க்கை நிலை , தன்  வாழ்வில்
அடையும் நன்மை , தீமைகள் இவைகள் எதனால்
உண்டாகின்றது. அதற்கு உண்மையான மூலகாரணம் என்ன ?
என இது போன்று மறைக்கப்பட்டுள்ள மூல ரகசியத்தை
உள்ளங்கையில் உள்ள பழம் "பளிச்" என்று நம் கண்ணிற்கு
தெரிவது போல உண்மை விளக்கத்தினை நன்கு புரியும்படி
தெளிவாக கூறி உலக மக்களுக்கு மன மாயையை , போலியான
உண்மைக்கு மாறான கருத்து நம்பிக்கைகளை மாற்றி,
ஞான நிலையை உலக மக்களுக்கு உப தேசித்து அருள் புரிந்து
வரும் உண்மை குருவே!  உன்னை வணங்குகின்றேன்.

மனதில் கள்ளம் , கபடு , சூது , அவநம்பிக்கை ,போட்டி ,பொறாமை ,
ஆணவம் , மாயை போன்ற தீய குணங்களை நீக்கி , சித்தர்கள் ,
ஞானி , மகான்களாகிய உங்களை பரிபூரணமாக நம்பி ,
உங்கள் வழிகாட்டுதளை ஏற்று வாழ்ந்து வருகின்றவர்கள்
வாழ்வை, அவர் வாழ்க்கையை உயர்வாக அமைத்து தருபவரே,
உங்கள் பாதங்களை பணிந்து வணங்குகின்றேன்.

Thursday, 30 August 2012

"குரு வணக்கம்" - 3

பாடல் :
"வேதப்பொருள் இன்னதென்று வேதங் கடந்த
 மெய்ப்பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
 போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
 பூரணசற் குருதாள்கண்  டாடு  பாம்பே"

பொருள் :   
இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதர்கள்  நான்கு வேதங்களே
பெரிது , வேதத்தில் அனைத்தும் அடக்கம் , வேதம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளது  என  நம்பிக் கொண்டு
மக்களிடையே சிலர் பரப்புரை செய்து கொண்டு வருகின்றார்கள் .
காலம் காலமாக மக்களும் இதை நம்பிக்கொண்டு வருகின்றார்கள் .
இந்த நான்கு வேதங்களின் சூட்சுமமான  உண்மைப் பொருளை
உணராமல் தவறாக புரிந்துகொண்டு சரியை , கிரியை என்ற
நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு வேதத்தின்
உண்மைகருத்துகளை கூறி விளங்கவைப்பவரே .

இந்த நான்கு வேதங்களும் கூறிடாத , அளவிட்டு கூற முடியாத , வேதங்களாலும்  , வேதத்தை எழுதியவர்களும் அறிந்து விளக்க
முடியாத நான்கு வேதங்களுக்கும்  அப்பாற்பட்டு வியாபித்துள்ள
உலக சீவராசிகளின் பிறப்பு , படைப்பு , வாழ்க்கை , விதிஅமைப்பு
இவைகளின் மூலத்தையும் வேதத்திற் அப்பாற்பட்ட  சூட்சுமமான  உண்மைகளையும் , பாமரமக்களும் உணரும் படியாக போதித்து ,
உலகமக்கள் உண்மையான ஞானம் , முக்தி அடைய வழி காட்டிய
பூரண ஞான குருவின் திருவடியை வணங்குகின்றேன் .

Wednesday, 29 August 2012

"குரு வணக்கம்" - 2

பாடல் : 
"பொய்மதங்கள் போதனை செய் பொய்க்கு ருக்களைப்
 புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
 மெய்மதந்தான்  இன்னதென்றும்  மேவ விளம்பும்
 மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய்  பாம்பே"

பொருள் :
குருவே ! இந்த கலியுகத்தில் மதம் , சாதி , இனம் , குலம் ,
கோத்திரம் என பிரிவினைகளை மனிதர்களிடையே உண்டாக்கி,
மக்களிடையே மனவேற்றுமையை பிரிவினையை  உண்டாக்கி,
தங்கள் பேச்சு திறமையால் ஆன்மிகம் , வழிபாடு என பல பொய்யான
கருத்துகளை பரப்பி ஆசான் , குரு , மடாதிபதி  என தன்னைக் கூறிக்
கொண்டு மக்களிடையே பணம் , பொருள் பறித்து வாழ்ந்து
கொண்டிருக்கும்  "போலி குருவிடம் இருந்து , அவர்களை
நம்பிக்கொண்டு இருக்கும்  மக்களுக்கு நல்ல அறிவு
உண்டாக்கக்கூடிய  நல்லகருத்துகளை  கூறி , வாழ்க்கைக்கு
நல்ல வழி  காட்டும் என்குருவே ;

போலி வேடம் தரித்து தங்கள் சுக வாழ்விற்காக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வாழும் போலி குருக்களையும் உண்மையான
கருத்துகளை கூறி திருத்தும் என் குருவே ;

இந்த போலியான வேஷதாரி குருமார்களை தக்க சமயத்தில்
வெளிப்படுத்தி , இவர்களை நம்பி ஏமாறும் மக்களுக்கு நல்ல
அற உரைகளை கூறி , உண்மையான "ஆன்மிகம்" பற்றிய
விளக்கத்தினையும் , கருத்துகளையும் கூறி சாதாரண பாமர
மக்களையும் "பூரண ஞானம்" அடைய செய்து , இந்த உலகில்
நல்ல வழியில் மனிதன் வாழ்ந்திட வழிகாட்டும் குருவே;

மனிதனாக பிறந்தவர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய குருவே ; ஞானம் , மோட்சம் , முக்தி
அடைய வழி  இதுதான் என கூறி அருள் பாதை காட்டிய குருவே;
உங்கள் திருவடியை மனத்தால் தியானித்து வணங்குகின்றேன்.


Tuesday, 28 August 2012

"குரு வணக்கம்" - 1

பாடல் :
"சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே 
 தானம் வாங்கி நின்றவெங்கள்  சற்குருவினைப் 
 போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்தப் 
 புகழ்ந்து புகழ்ந்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
குருவே! என் உடல் பொருள் ஆவி இவை மூன்றினையும் தங்கள் 
திருவடியில் முழுமனதுடன் ஆத்மார்தமாக சமர்ப்பணம் 
செய்கின்றேன் . இவைகளை மனமுவந்து தத்தமாக
ஏற்றுக்கொண்டு அருள்புரியும் குருவே , உங்களை என் 
மனம் , வாக்கு சரீரத்தால் உங்கள் பாதங்களை போற்றி 
வணங்குகின்றேன் .   

Monday, 27 August 2012

"சித்தர் காப்பு"

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை 
முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; 
வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங்காப்பு ; 
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ; 
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ; 
பரம கயிலாய  குரு போகர் பாதங்காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர்  பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர்  பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர்  பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர்  பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர்பாதங்காப்பு;
நல்ஞானஜோதியைநலமாய்உரைத்திட்ட நற்குதம்பைபாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு; 
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;

காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் ,  சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் ,  
பதஞ்சலியார்  கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் 
வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி 
காப்புதானே". 

Sunday, 26 August 2012

"உலக உயிர்வணக்கம்"

பாடல் :
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
 கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
 ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
 நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
பொருள் :
கார்மேகம் சூழ்ந்து , மழை நீர் தந்து, இந்த உலக உயிர்களை
காக்கும் வான மண்டலம் எந்த மாசும் இல்லாமல் வாழ்க!.

இந்த பூமியில் மனிதர்களாக பிறந்து ,வாழ்ந்து , என்னை
உருவாக்கி , உயிர்  தந்து , வாழ்க்கை  தந்து மறைந்து ,
வான் உலகில் 'பிறவியில்லாப் பெருவாழ்வு' பெற்று , மிகப் பெரிய தவத்தன்மை பெற்ற என் தாய் , தந்தை ,வம்சாவழி
முன்னோர்கள் வாழ்க!.

இந்த பூமியில் தன்னுயிர் போல் நாட்டையும் , தன் நாட்டு
மக்களையும்  பசி , பஞ்சம், இல்லாமல் நீதி , நேர்மை , கொண்டு
ஆட்சி செய்யும் , நல்ல ஆட்சி நிர்வாகம்  செய்யும் அரசர்கள்,
நிர்வாகிகள் வாழ்க!.

எனக்கு  பூரண ஞானம் அறிய செய்து , உலகினையும் , உலக
மக்களையும் , உலக சமுதாயத்தை புரிய செய்து, இந்த பிறவியில் நான் யார் ?. என்பதை அறிய செய்து
உலகத்தையும் , இந்த சமுதாய விதிகளை அறிய செய்து ,
நன்மை , தீமை , உண்மை ,பொய் , என அனைத்தையும்
பகுத்து அறியும்  அறிவான 'ஆறாவது அறிவை' அறியும் படி
செய்து , இந்தப் பிறவியில்  எனக்கு எது நல்லது ?. எது கெட்டது என்ற விபரங்களை போதித்து ,என்னையும் தங்கள்
சீடனாக ஏற்று பூரண ஞானத்தை  போதித்து  வரும் என்
குருமார்கள் வாழ்க !.

இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்கள் , பசு முதலான  அனைத்து சீவ ராசிகளும் வாழ்க! .

இந்த உலகில் பிறந்து தேசத்திற்கும் , மக்களுக்கும் தொண்டு
செய்து வாழ்ந்து அமரத்துவம்  பெற்று , இன்றும் தான்  செய்த
நற்செயல்களால், மக்கள் மனதில்  வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஞானிகள் , மகான்கள் , தலைவர்கள் , பெரியோர்கள் 
நாமம் வாழ்க!.

உலக மக்களுக்கு  உண்மை ஞானம் , உலகைப்பற்றிய
விழிப்புணர்வு  போதித்த சித்தர்களும் , ரிஷிகளும் ,
முனிவர்களும்  வாழ்க !.

நான் , நீ , ஜாதி ,மதம் , என பேதம்  பிரிவினை  பாராமல் உலக
உயிர்களை , மனிதர்களை , சீவன்களை ஒன்று போல் நேசித்து  வாழும் ஞான பெரியார்கள் , வழிகாட்டிகள்  வாழ்க!  வாழ்க!  வாழ்க!.     
  

Saturday, 25 August 2012

யார் இந்த சித்தர் தாசன் ?.

நான் ஒரு ஜீவ நாடி சோதிடர் , நான் கரூர்  மாவட்டம்
குளித்தலையில் வசித்து வருகின்றேன் . என்னுடைய
இயற் பெயர் சுந்தரநாதன். என் தந்தை பெயர் T .K .சுப்ரமணியம் .
என் தாயார் பெயர் சாரதா அம்மாள் . நான் ஆரம்ப காலத்தில்
 எல்லோரையும் போல வேதாந்த முறைப்படி பக்தி செலுத்தி
 இறை வழிபாடு செய்து கொண்டு இருந்தவன் .

பின் சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என
எண்ணம் என் உள்மனதில் தோன்றியது .சித்தர்களை பற்றிய
விபர தேடல் தொடங்கியது நான் எந்த கஷ்டமும் அடையாமல்
சித்தர்களை பற்றிய உண்மை விபரங்களும்அவர்களின்
ஞானப்படல்களும் சித்தர்கள் கூறிய "சித்தாந்த கொள்கைகள்",
கருத்துகள் எனக்கு அவர்கள் அருளால் கிடைத்தது .

தற்போது மக்களிடையே "சைவம்" வளர்த்த அகத்தியர்
முதலான 18 சித்தர்களைப் பற்றி தவறான செய்திகள் சினிமா ,தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் மூலம்
பரப்பபட்டு வருகின்றது . பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் சித்தர்களைப்பற்றி கற்பனை கதைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

சித்தர்கள் யார்?.
சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன ?.
மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு "என்ன?.
மனிதன் வழிபட வேண்டிய சக்தி எது?. என இது போன்று
இன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின்  அருளால்
இந்த கணிணி தொடர்பு மூலம் உங்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்பதே இந்த ஆரம்பம் .

 சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும் .
சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்களுக்கும் . தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும் .
தன்னை யார்?. என்று அறிந்து கொள்ளவேண்டும் ,
தன் வாழ்வின் பிரச்னை ,சிரமம் , கஷ்டம் இவைகளை  எப்படி
தீர்த்துக்கொள்ள வேண்டும்?. என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம்  சித்தர்கள் பல தெளிவு
நிலையை தருவார்கள் . மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்
தெளிவடையும்  நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.

சித்தர்கள் அருளால் நான் எழுதிய 3 நூல்கள் :
1. 18 சித்தர்களின் வல்லபமும் வழிப்பாட்டு முறைகளும் .
2. அகத்தியர் வரலாறும் - அருள் ஞானப் பாடல்களும் .
3. காகபுசுண்டர் ரிஷி வரலாறும் - சித்தர் சித்தாந்த வழி ஆன்ம ஞானமும் .

என மூன்று நூல்கள் எழுதி பதிப்பித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது .

மாதா , பிதா , குரு , இம் மூவருமே நமக்கு தெய்வம் என்ற நிலையில் முன்னோர் வழிபாடும் , குரு வழிபாடும் சித்தர்கள் காட்டிய வழியில் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன் .

தொடர்புக்கு 

சித்தர்தாசன் ,
பிருகு ஜீவநாடி ஜோதிடர் ,
குளித்தலை , கரூர் மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா .
கைபேசி  : 9944113267