Monday, 22 April 2013

தொடர்ச்சி


1.            கர்ம முக்தி                       (தொழில் ஒழுக்க உயர்வு)
2.            தேக முக்தி                       (சரீர ஒழுக்கம்)
3.            சீவ முக்தி                         (சீவன் ஒழுக்கம்)
4.            மன முக்தி                        (மனகட்டுபாடு ஒழுக்கம்)
5.            ஆன்ம முக்தி                   (தன்னையறிதல்)
1.            கர்ம முக்தி என்பது நமக்கு வெற்றி தரக்கூடிய தொழிலை சரியாக       
               தேர்ந்தெடுத்து செய்தல். செய் தொழிலை விழிப்புணர்வுடன் செய்து,
               புகழையும், பொருளையும் அடைவது. (கர்மம் - தொழில்).
2.            தேக முக்தி என்பது நமது சாரீரத்திற்கு தீமை தரும் உணவுகளை நீக்கி,
               நன்மை தரும் உணவுகளை மட்டும் உண்டு, சாரீரத்தை வலிவும்
               வனப்பும், வாலிபமும் கொண்ட தாய் அமைத்து கொள்வது. தேகத்தில்
               உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றுதத்துவத்தையும்
               சமநிலைபடுத்தி வைத்துக் கொள்வது. இது தேக முக்தி, சரீர முக்தி
               ஆகும்.
3.            சீவமுக்தி என்பது நமக்கு வாழ்வில் தீமைகளை உண்டு பண்ணும்
               அனைத்து செயல்களையும், நட்பு, உறவு என அனைத்தையும் நீக்கி,       
                நன்மைகளை மட்டும் உண்டாக்கும் செயல்களை மட்டும் செய்து,
                எப்போதும் தன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன், வாழ்வது, வாழும்
                போதும், வாழ்ந்து மறைந்த போதும் நாம் செய்த செயல்களால்
                மற்றவர்கள் நம்மை பெருமைப்படுத்துவது சீவ முக்தி ஆகும்.
4.             மனதின் முக்தி என்பது நமது மனதினை சரியான பாதையில் மட்டும்
                செலுத்தி வாழ்வது, மாயையின் வசம் ஆட்படாமல் வைத்து            
                கொள்வது, இயற்கையின் உண்மை தத்துவம் புரிந்து வாழ்வது.
                 மனசலனம் நீக்கி எப்போதும் எதற்கும், மனதினை அமைதியாக
                 வைத்துக் கொண்டு வாழ்தல், சமுதாய மாற்றத்தை,   
                சமூகத்தை  புரிந்து தன்னை காத்துக் கொள்தல் மனமுக்தி ஆகும்.
5.             ஆன்ம முக்தி என்பது இந்த பிறவியில் நாம் பிறந்த காரணம் அறிவது,
                ஊழ்வினையை உணர்வது  நம் வாழ்வில் உண்டாகும் நன்மை,
                தீமைகளை பகுந்து ஆராய்ந்து தீமைகளை நீக்கி, நன்மை தரும் 
                செயல்களை அறிதல், நன்மை தீமை, பகை, நட்பு, உயர்வு, தாழ்வு என
                எல்லாவற்றையும் சமமாக பாவித்தல், தன்னையரிதலே ஆன்ம
                முக்தி ஆகும்.
                இந்த ஐந்து ஒழுக்கநிலைகளிலும் யார் வாழ்வில் சரியாக வாழ்ந்து வருகின்றார்களோ, அவர்களே முக்தி அடைந்தவர்கள், என்பது சித்தர்கள் அருளிய சித்தாந்தம் கூறும் முக்தியாகும்.
                 இன்றைய நாட்களில் சித்தர்கள் பெயரை சொல்லி, கடவுள் பெயரை சொல்லி சிலர் அன்னதானம், மடம் என மற்றவர்களிடம் பணம், பொருள், பறித்து கொஞ்சம் பிறருக்கு கொடுத்து, மற்றவற்றை எல்லாம் தன் சுகத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றார்கள். இந்த போலி மடாதிபதிகளை நம்பி தவறான வழியில் பொருள் சேர்த்தவர்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்தால் தான் செய்த பாவம் தீரும், பிறரை ஏமாற்றி சொத்து சேர்த்த பாவம் தீரும் என்று கூறி செயல்பட்டு வருகின்றார்கள். இப்படி செய்வதால் ஏமாற்றும் போலி குருவிற்கும் முக்திகிட்டாது. இந்த திருடர்களுக்கும் முக்திகிட்டாது.
                இதனை விடுத்து நாம் செய்யும் பரிகாரமும், பூசையும், யாகமும், ஹோமமும், அலங்கார வழிபாடும் தவறினை செய்து, தவறான வழியில் சேர்த்த பொருளால் செய்யும் தானமும், தர்மமும், கோயிலுக்கு தரும் பணம், பொருள், காணிக்கைகளும் நமக்கு முக்தியை தராது. "பிராப்த விதியினை" மாற்றாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பக்தி, ஞான, முக்தி நிலையை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
                 ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் அறிவை, ஆற்றலை, இயற்கையான திறமையை அறிந்து  அந்த கலையில் நம் குழந்தைகளை வல்லவர்கள் ஆக்குங்கள். இனி வரும் சந்ததிகளுக்கு, நம் வாரிசுகளுக்கு இயற்கையின் உண்மை ஞானத்தை போதியுங்கள். சித்தர்கள் அருளிய சைவ சித்தாந்த ஞான கருத்துகளை, போதித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். சாத்திரம், சடங்கு உங்களுடன் முடியட்டும். சித்தர்களை பற்றியும், அவர்கள் கூறிய "வாழும் கலையான சைவ சித்தாந்தத்தை" உலகிற்கு உணர்த்துங்கள். ஒளிமயமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள்.

                                    "சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்".

தொடரும்.....




Saturday, 20 April 2013

தொடர்ச்சி

                              பிழைக்க முக்தி யறியாமற் சென்ம
                              பூர்வ கியானந் தெரியாமற்
                              தலையை தின்று சருகா கித்திசை
                              தயங்கு றாரடி ஞானப் பெண்ணே - என்கிறார்.
                 இந்த பூமியில் மனிதர்கள் வாழும் காலத்திலேயே துன்பம், பிரச்சனை, கஷ்டம், வறுமை, நோய் இவைகள் இல்லாமல், புகழ், செல்வம், பதவி என தன் வாழ்வில் அமைத்து கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழவேண்டும்? என அறிந்து கொள்ளாமல், அதனை அறிந்து கொள்ள வலி தெரியாமல், அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த பிறவி எடுக்க காரணமே தன் ஊழ்வினையும், வம்சத்தில் முன்னோர்கள் காலத்தில் செய்த பாவங்களையும், சாபங்களையும், தீர்க்கவே இந்த பிறவி உண்டானது. இந்த பிறவியில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட பிராப்த விதி என்ன? பூர்வ சென்மா கர்மா என்ன? என்று தெரிந்து கொள்ளாமல் எதை, எதையோ பேசிக்கொண்டு, எதை, எதையோ செய்து கொண்டு அலைகின்றார்கள். இந்த பிறவியில் நமக்கு ஏற்படும் கஷ்டம், பிரச்சனை, வறுமை, நோய் என அனைத்திற்கும் ஊழ்வினையே காரணம் என உணர்ந்து கொள்ளுங்கள். இதனை தீர்த்து விதியை தடுத்து கொள்ள தன்னையறியும் ஞான நிலையை உணருங்கள். இதனை விடுத்து கடவுள், பூசை, ஹோமம், யாகம், செய்து கொண்டு விதி தீரும், கிரகங்களின் கெடுதல் குறைந்து விடும் என்பது நல்ல உணவு இருக்க அதனை உண்ணாமல் காய்ந்து போன இலை சருகுகளை தின்று, ஆடு, மாடு போல அலைந்து கொண்டு இருப்பதற்கு சமமாகும். இதனால் பயன் இல்லை. தன்னையறியும் ஞானம் இல்லாதவன், இந்த பிறவியில் முக்தி அடைய வேண்டும். தன் வாழ்வில் கஷ்டம் தீர வேண்டும் என்று பல வகையான விரதம், பூசை, ஹோமம், வழிபாடு, கோயில், குளம் என இன்னும் ஏதேதோ பரிகாரம் செய்து கொண்டு திசை தெரியாமல் அலைந்து கொண்டு இருப்பான். முக்திக்கும் நல்வாழ்விற்கும் இந்த சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் காட்டும் வழிகள் உதவாது. தன்னையரிதலே ஞானத்தை தரும், ஞானநிலையே ஊழ்வினை, விதியை தெரியபடுத்தும், இதனை அறிந்து சரியான திசையில் சென்றாலே வாழும் பொழுதே முக்தி நிலை உண்டாகும் என்கிறார் என்குரு.
                 இந்த பூமியில் பிறந்த மனிதன் தன் வாழ்வினை கடவுள் சக்தியோ, ஒரு மந்திரமோ, அல்லது பூசை, யாகம், ஹோமம் போன்ற செயல்களை செய்வதாலோ, அவை நம்மை காப்பாற்றி வாழ்வில் புகழ், பொருள், பதவி, உயர்வு என தந்து நம் வாழ்வினை உயர்த்தும், அல்லது நண்பர்களோ, உறவினர்களோ, நமக்கு உதவி செய்வார்கள் என நம்பிக்கை கொண்டு வாழாமல், தன் ஊழ்வினை விதியை தன் ஞானத்தால், தன் அறிவினால் அறிந்து கொண்டு தன் திறமையை பயன்படுத்தி நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்பவன். வாழும் போதே முக்தி அடைந்தவன் ஆவான்.
                 ஞானம், முக்தி, தன்னையறிதல் என்பது கடவுள், பூசை, சாத்திரம், வேதம், புராணம் சம்பந்தப்பட்டது அல்ல. இது ஞானம் அடைய உதவாது. தன்னையரிதலே ஞானம், அந்த ஞானத்தை பயன்படுத்தி வாழ்தலே முக்தி நிலை என்பதை உணருங்கள்.
                                சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
                                தந்திரம் புராணங்களை சாற்று மாகமம்
                                விதம்வித மானவான வேறு நூல்களும்
                                வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.
                  நான்கு வேதம், ஆறுவகை சாத்திரம், தந்திரம், மந்திரம், புராணம் கூறும் கதைகள், சிவ ஆகமம், கோயில் ஆகமம், என இன்னும் இது போன்ற நூல்கள் எல்லாம் வீணான நூல்கள், இந்த நூல்கள் கூறுவதை படித்தும், பிறர் கூறுவதை கேட்டும், வாழ்வில் செயல்பட்டு வாழ்ந்தால், ஞானமும் கிட்டாது. இந்த நூல்கள் கூறும் பொய்யை நீக்கி, தன்னையறிதல் நிலைக்கு மாறி வாருங்கள் என்கிறார் என்குரு பாம்பாட்டி சித்தர்.
                 உங்களை முதலில் நீங்கள் அறியுங்கள். உங்கள் வீட்டை முதலில் சரி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் வறுமை வராமல் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை வளமானதாக உயர்த்திக் கொள்ளுங்கள். "தனி மனித உயர்வு, தேச உயர்வு" என உணருங்கள். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வு அடையும் போது தேசம் உயர்வு அடையும் என அறியுங்கள்.
                  மழை காலத்திற்கு வேண்டிய பொருளை வெயில்
                  காலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
                  நாளைக்கு வேண்டியதை இன்றே சேமித்து
                  வைத்துக் கொள்ளுங்கள்.
                  முதுமைக்கு தேவையான சொத்து, பணம் இவைகளை
                  இளைமையிலேயே சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
                  முக்தி என்பது நாம் ஐந்து ஒழுக்க நிலைகளில் அடைய வேண்டியது ஆகும்.



தொடரும்...........

Tuesday, 16 April 2013

முக்தி


இன்றைய மனிதர்கள் முக்தி என்பது இறந்த பின் மோட்சம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என இந்த உலகங்களை அடைவது தான் முக்தி அடைதல், என்ற நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கு இறைவனை வணங்கி வந்தால், கடவுள் உபாசனை செய்து வந்தால், முக்தி கிடைக்கும் என்று எண்ணி வாழ்ந்து வருகின்றார்கள். சிலர் இறப்பது தான் முக்தி என்றும் கூறிவருகின்றார்கள். இதுபோன்ற மனிதர்களை பார்த்து என்குரு அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.
"நாடு மெச்ச நரகம் என்பார் சொர்க்க மென்பார்
                  நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்" என்கிறார். மற்றவர்கள் தன்னைப்பற்றி பெருமையாக எண்ண வேண்டி நரகம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என எல்லாம் தெளிந்த ஞானி போல் பேசுவார்கள் ஆனால் தன் வாழ்வில் தனக்கு எது நல்லது, கெட்டது, தன் செயல்களில் எது நல்லது, கெட்டது என அறிந்து கொள்ளாத மூடர்கள் என்கிறார்.
                 இந்த பூமியில் நாம் உயிருடன் வாழும் காலத்திலேயே சுகம், போகம், செல்வம், புகழ், பதவி என அனைத்தையும் அடைந்து, தன்னை உருவாக்கிய தாய், தந்தையையும், தான் உருவாக்கிய மனைவி, குழந்தை, குடும்பத்தாரை சந்தோஷமாக வாழ செய்து, பெற்றோருக்கு நல்லமகனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ்ந்து, தானும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து "இல்லை" என்ற சொல்லே வாழ்வில் "இல்லை" என்று வாழ்ந்து வருவது தான் வாழ்வில் முக்தியை அடைந்த நிலையாகும்.
                 முக்தி என்பது கல்லூரி படிப்பை போன்றது உயர்நிலை பள்ளியில் தன்னிடம் உள்ள திறமை, ஞானம் அறிந்து தான் கற்ற கல்வியை மேலும், மேலும், விருத்தி செய்து அதில் நிபுணத்துவம் பெற்று, பக்குவம் அடைந்து, வெற்றியை அடையும் பருவம். பிறர் தன்னை திறமை உடையவன் என்று ஒப்புக் கொண்டநிலை. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் கற்றவன் கல்லூரி படிப்பில் பொறியாளர் ஆக உருவாகின்றான். விஞ்ஞானம் படித்தவன் விஞ்ஞானி, மருத்துவனாக முழுமை பெறுகின்றான். கலை கல்வி படித்தவன் அந்த கலையில் திறமையை நிரூபிக்கின்றான். இது போன்று தன் திறமையை முழுமையாக செயல்படுத்தும் சக்தியை அடைதலே, "முக்தி நிலை" என்று கூறலாம். வாழ்வில் பிறரை சார்ந்து வாழாமல், தன்னையறிந்து, முழுமை பெற்று, தன் திறமையால் புகழ், பொருள், பதவி என அனைத்தையும் அடையும் தகுதியை பெற்று, வாழ்வில் உயர்நிலையை அடைபவன் முக்தி நிலை அடைந்தவன் ஆவான். இதுவே மனிதன் முக்தி அடைதல் ஆகும்.
                  மோட்சம் வேண்டார்கள்                     -              அகப்பேய்
                                 முக்தியும் வேண்டார்கள்
                  தீட்சை வேண்டார்கள்                           -              அகப்பேய்
                                  சின்மயமானவர்கள்               -                என்கிறார்.
                  என்குரு தன்னையறிந்து ஞானம் பெற்ற மனிதர்கள், தன் வாழ்வில் இறந்தபின் மோட்சம் அடைய வேண்டும். முக்தி நிலையை அடைய வேண்டும் என எண்ண மாட்டார்கள் ஏன் என்றால் இந்த மோட்சமும், சொர்க்கமும் பொய்யானது என்று அவர்களுக்கு தெரியும். இந்த மோட்சம், சொர்க்கம், முக்தி இவைகளை அடைய கடவுள் பக்தியும், பூசை, ஹோமம், தீட்சை மந்திரங்கள் உதவி செய்யாது என தெளிவாக உணர்ந்து உள்ளதால் இவர்கள் இன்றைய போலி குருமார்களை நம்பி ஏமாறமாட்டார்கள். அவர்களிடம் சென்று தீட்சை பெற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் கூறும் தீட்சை மந்திரங்களையும் கூறி, செபம் செய்து செபித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தன் ஞானத்தினால் உலகில் உண்மை, பொய் இவைகளை தானே அறிந்து மாயை நீக்கி, வாழ்வை மேன்மையானதாக கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைவார்கள். அனுபவிப்பார்கள்.
                   மூலமில்லையடி                           -        அகப்பேய்
                                 முப்பொருளில்லையடி.
                   மூல முண்டானால்                     -         அகப்பேய்  
                                  முக்தியுண்டாமே.
                     இந்த உலகம் உருவாக காரணம் கடவுள் தான், இறைவன் தான் இந்த பூமியை உண்டாக்கி, சகல உயிர்களையும் படைத்தான் என்று கூறுவது பொய்யான வாதம் ஆகும். படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, அளிக்கும் கடவுள் சிவன் என்று கூறுவார்கள். இது பொய், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் என்ற மூவர் தெய்வ தத்துவம் பொய்யானது. இதை நம்பி அலைவதைவிட்டு விட்டு, உன் பிறப்பின் மூலத்தை அறிந்து உடல், உயிர், ஆன்மாவாக உள்ள நீ உனக்கு நிர்ணயிக்கப்பட்ட மூலத்தை, உன் விதியை, உன்னையே நீ அறிந்து வாழ்ந்து வந்தால் உனக்கு வாழும் போதே முக்தி உண்டாகும் என்கிறார்.
                     மூல வேற றிந்து கொண்டால் மூன்றுலகமும்
                     முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம்
                     சாலவேர றிந்தாலே தான் பயனுன்டோ
                     சகத்தைபொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே.
                    ஒரு மனிதன் தான் பிறந்ததின் மூல காரணத்தை, தன் விதியை, ஊழ்வினையை தன் ஞானத்தால் தன்னையறிந்து கொண்டு, தான் வாழ வேண்டிய வழி முறையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், வாழும் போதே மூன்று உலகமும் அடைந்து முக்தி நிலையை கொண்டவன் ஆவான். இப்படி தான்வாழும் கலை அறிந்த ஞானி தினம், தினம் முக்தி அடைந்த வாழ்வை பெறுவான். இதை விடுத்து இந்த பூமியில் சில பொய்யர்கள் கூறும், இறந்த பின் முக்தி நிலை என்ற பொய்யான பேச்சுகளை  கேட்டு கடவுள், பூசை, ஹோமம், தானம், தர்மம் என்று நம்பி அலைந்து கொண்டு, தன் வாழ்வினை இவைகள் உயர்த்திவிடும், முக்தியை தந்து விடும், என்று நம்பி அலைந்து கொண்டு இருந்தால் எந்த பயனும் கிட்டாது. எனவே இந்த பூமியில் கூறும் பொய்யான, கட்டு கதைகளை புரிந்து கொண்டு தன்னையறிந்து வாழ்தலே முக்தியை தரும்.

தொடர்ச்சி....       

Thursday, 11 April 2013

தொடர்ச்சி....


                  இந்த பூரண ஞானம் பெற்றவர்கள் உலகில் இயற்கையை ஆராய்ந்து, நமக்கு பல நல்லகருத்துகளை, ஞான மொழியாக கூறியுள்ளார்கள். இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே, உலகில் பிறக்கும் உயிர்கள், உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையினால் படைக்கப்பட்டு, அதன் பிறகு தான் மனிதரும், விலங்கினமும், தாவரமும் தோன்றியது. உலக உயிர்கள் சுவாசிக்க காற்று, பசிக்கு தானியம், தாகத்திற்கு தண்ணீர், வெளிச்சம், நோய் தீர்க்கும் மூலிகைகள், தங்கம் வெள்ளி, வைரம், பாறை, மலை, என இன்னும் எவ்வளவோ படைக்கப்பட்டுவிட்டன. இவைகளை அடைந்து அனுபவிக்க உயிர்களுக்கு கை, கால், மூளை, அறிவு என சாரீரம் அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன் சரியான அறிவு, முயற்சி கொண்டு, இவைகளை எவ்வளவு வேண்டும் என்றாலும் அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் கிடையாது. இவைகள் ஒருவருக்காக படைக்கப்படவில்லை என்பதை உணர்தல் அவசியம். இதை விடுத்து கடவுளை வணங்கினால் எல்லாம் கிடைத்து விடும் என்று வாழ்வது அறியாமை, ஞானமற்ற மனித நிலையாகும். பூமி தோன்றிய போது இயற்கையால் படைக்கப்பட்ட பொருட்களை தவிர புதிதாக ஒரு பொருளை எந்த ஒரு சக்தியாலும் பூமியில் உருவாக்கமுடியாது என்பதை அறிதலே மூல ஞானம். நிர்ணயிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது என்பதை அறிதலே ஞானம்.
                    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்வும் எப்படி அமைந்துள்ளது. எதனை அடிப்படையாக கொண்டு பிறப்பு உண்டாகின்றது என்பதை என் குரு கூறுவதை கேளுங்கள்.
                    அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் 
                    அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் 
                    எவரெவர்க் குதவினார் எவரெவர்க் குதவிலர் 
                    தகையவர் நினைவது தமையுணர் வதுவே 
                                                                                                      என்று கூறுகின்றார்.
                    இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும், முன்னோர்களால் வம்சத்தில் உண்டான பாவ, சாப, புண்ணியங்களை அனுபவித்து தீர்க்க, ஊழ்வினையை கழிக்க, இந்த பூமியில் பிறக்கின்றனர். அந்த ஊழ்வினைகளின் கணக்கின்படிதான், இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தடை, கஷ்டம், நோய் என, பலவிதமான அனுபவ நிகழ்வுகள் கொண்ட வாழ்க்கை அமைகின்றது. தன் ஊழ்வினையின்படியே பலன்களை வாழ்கையில் அனுபவித்து வருகின்றார்கள்.
                   எனவே இந்த பூமியில் பிறந்த ஒரு மனிதனோ, அல்லது தெய்வமோ, பூசை, ஹோமம், யாகம், மந்திரம், மணி வழிபாடு, விரதம், தானம், தர்மம், என எந்த ஒரு கிரியை செயல்களை செய்தாலும், இந்த ஊழ்வினை படி நாம் அனுபவிக்க வேண்டிய "பிராப்த விதியை" தடுத்து விடமுடியாது. பரிகாரம் என்ற பெயரில் செய்யும் சடங்கு, சம்பிரதாய, சாஸ்திர செயல்களால் ஊழ்வினை விதியை மாற்ற முடியாது. மற்ற எவரும் உதவி செய்து நம் ஊழ்வினையை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஞானத்தினால் தன்னையறிந்து, ஞான நிலையுடன் வாழ்ந்தால் ஊழ்வினையை அறிந்து தடுத்துக் கொள்ள முடியும் "தன்னையறிதலே ஞானம்". இதுவே விதியை தடுக்கும் சக்தி.
                  ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே இந்த பிறவியில் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஊழ்வினையின் படி, விதி பயன் நிர்ணயித்த பின் தான் பிறக்கின்றான். இதனை "பிராப்த விதி" என்பார்கள். இந்த நிர்ணயித்த விதியை, தன்னை யறிந்தவன் தடுத்து நல் வாழ்வை அடைய முடியும். தன் விதியை தடுத்து கொள்ளும் வழியை அறிதலே ஞானம் என்கிறார்.
                  தத்துவ குப்பையை தள்ளுங்கடி வேத 
                                   சாத்திர பொத்தலை மூடுங்கடி 
                  முக்தி தருஞான வத்துவை வாவென்று 
                                   மூட்டி கும்மியடி யுங்கடி.

தொடரும்.....

Wednesday, 10 April 2013

தொடர்ச்சி...


               மேலும் சித்தர்கள் கூறுவதை கேளுங்கள் படித்தவர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் படிக்காதவன் ஞானம் அடைய முடியாது என்பதல்ல. படிக்காதவர்களும், இயற்கையில் தனக்கு பிறப்பிலேயே அமைந்துள்ள திறமையை சரியாக பயன்படுத்தி, ஞானத்தினை விருத்தி செய்து நல்வாழ்வு பெற்றவர்கள் ஏராளம். இதனை கேள்வி ஞானம் மூலம் பல கலைஞர்கள் புகழ் பெற்று உள்ளனர். அனுபவ ஞானம் மூலம் அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் என உலக புகழ் பெற்று உன்னத நிலையில் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைத்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இவர்கள் சிறு வயதில் சிரமம் அடைந்து இருந்த போதும், ஞான நிலை அடையும் பருவ வயது வந்த போது தன்னையறிந்து, தன்னிடம் உள்ள திறமையை சரியாக உணர்ந்து, அதனை செயல்படுத்தி வாழ்வில் உயர்ந்து விடுவார்கள். இவர்கள் தன் அறிவு, ஞானத்தை பயன்படுத்தி வாழ்வில் உன்னத நிலையை அடைந்தவர்கள் தானே தவிர, கடவுளை வணங்கி மந்திரம் கூறி வாழ்வில் புகழ் பெற்றவர்கள் அல்ல. கல்வி என்பது பருவ வயதிற்காக, உதாரணமாக கூறப்பட்டது என்குரு, ஞானிகளை பற்றி கூறும் போது
                 "சன்னியாசி யானவருள் மூடருண்டு
                                 சமுசாரஞ் செய்பவருள் ஞானியுண்டு" என்கிறார்.
                 கடவுளை வணங்கி, பக்திமான், மகான், என கூறிக் கொண்டு, காவி, கமண்டலம், ருத்ராட்சம், மதசின்னங்களை அணிந்து தன்னை பெரிய சக்தி உள்ளவர் போல காட்டிக் கொள்ளும், "குருமார்" என்று தன்னை கூறிக் கொள்ளும் மனிதர்களிலும், ஒன்றுமே தெரியாத முட்டாள்கள், பிறரை ஏமாற்றி பிழைப்பவர்கள் வேடதாரிகள் இருப்பார்கள். திருமணம் புரிந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் இல்லற வாழ்கையில் ஈடுபட்டு இருக்கும் சம்சாரியிலும் அளவற்ற ஞானம் உள்ள ஞானிகள் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள் என்கிறார். கடவுளை வணங்குபவர் ஞானி அல்ல, கடவுளை வணங்கினால் ஞானம் அடைய முடியாது என்கிறார்.
                 என்குரு அகப்பேய் சித்தர் கூறும்போது
                 சரியை யாகாதே                 -             அகப்பேய்
                 சாலோகங் கண்டாயே
                 கிரியை செய்தாலும்          -              அகப்பேய்
                 கிட்டுவ தொன்றில்லை
                 யோக மாகாதே                    -              அகப்பேய்
                 உள்ளது கண்டக்கால்
                 தேக ஞானமடி                      -               அகப்பேய்
                 தேடாது சொன்னேனே
                 தன்னை யறிய வேணும்  -               அகப்பேய்
                 சாராமற் சாரவேணும்
                 பின்னை யறிவதெல்லாம்-             அகப்பேய்
                 பேயறி வாகுமடி - என்கிறார்.
                 சரியை என கூறும் பூசை செய்தால் நீ சாவு உலகம் தான் காணமுடியும், கிரியை பூசை செய்வதால் உனக்கு ஞானம் கிட்டாது. யோக நிலையை அடைந்தேன், எல்லாவற்றையும் அறிந்தேன், சகல சாத்திரம், புராணம், அறிந்தேன் என்று பல உதாரண கதைகளை கூறி நீயே உன்னை "யோகி" என்று பட்டம் சூட்டி அழைத்து கொண்டாலும் ஞானம் கிட்டாது. ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும். வேறு எந்த வேஷம் கட்டியும், கடவுளை பற்றிய விபரங்களை கற்றும், கடவுளை பற்றிய மந்திரம் சொல்லியும் பூசை, ஹோமம் செய்தாலும் அவைகள் எல்லாம் ஞான அறிவு கிடையாது. இந்த செயல்களை நம்பிக்கையுடன் செய்யும் நீ மனிதன் அல்ல, பேய் அறிவு கொண்ட  பேயின் நிலையில் வாழ்பவன் என்கிறார் என்குரு.
                  இன்னும் சித்தர் பெரு மக்களும், தவத்தில் சிறந்த முனிவர்களும், வள்ளலார், திருவள்ளுவர் போன்ற ஞானிகளும் ஞானத்தை பற்றி கூறும்போது இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு சீவனுக்கும் மனிதனுக்கும் சுயஅறிவு, ஆராயும் அறிவு, சமுதாய அறிவு, பிரபஞ்ச அறிவு, தன்னை அறியும் ஆன்ம அறிவு நிலை கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. இது இயற்கையின் விதி. இதனை சரியாக புரிந்து, அறிந்து வாழ்பவன் தன்னையறியும் அறிவால், ஞான அறிவை அடைவான்.
                 தன்னையறியும் அறிவு உள்ளவன் தனக்கு உள்ளே மறைந்துள்ள சக்தியை தேடி அடைவான். உலகில் மனிதன் வாழ தேவையான தண்ணீர், தானியம், தங்கம், வெள்ளி, வைரம் போன்ற பொருட்களை எப்படி மண்ணை தோண்டி உள்ளே இருந்து எடுத்து மனிதன் நம்வாழ்வின் செயல்களுக்கு பயன்படுத்துகின்றானோ, அதைப் போன்று மண் என்று கூறப்படும் நம் தேகத்தின் உள்ளே கடந்து சென்று நம்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே உள் கடந்து தன் அகத்தை ஆராய்ந்து தன்னை அறிவதே கடவுள் வழிபாடு ஆகும். இதை விடுத்து கோவிலில் கடவுளை வணங்குவது கடவுள் வழிபாடு அல்ல.
                இந்த பூமியில் நாம் எதற்காக பிறந்தோம். நாம் எந்த செயலை செய்தால் வாழ்க்கையில் உயர்வு அடைவோம், நம் வாழ்வில் எதனால் கஷ்டம், பிரச்சனை, வறுமை, உண்டானது. சரீரம் நோய் இல்லாமல் இருக்க எந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். எந்த உணவு வகைகளை நீக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களில் நமக்கு நன்மை செய்பவர்கள் யார்? தீமை செய்பவர்கள் யார்? எந்த தொழில் செய்தால் நம் வாழ்வில் உயர்வு அடைவோம். நமது வம்சத்தில் வாழ்ந்த முன்னோர்களால் உண்டாக்கப்பட்ட பாவ, சாப, புண்ணியம் எது? இவைகள் நம் வாழ்க்கையில் "பிராப்தம்" என்ற  பெயரில் எப்படி பாதிப்பை உண்டு பண்ணுகின்றது? இந்த பூமியில் படைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் மனிதன் அனுபவிக்கவா? அல்லது துறந்து விடுவதற்கா? தன்னிடம்  பிறப்பிலேயே உண்டான திறமை எது? இதனை எப்படி விருத்தி செய்து கொள்வது? இந்த உலகில் இயற்கையில் உருவானது எது? அதில் நிலையானது எது? மனிதனால் உருவாக்கப்பட்டு மறைவது எது? இப்படி தன் வாழ்விற்கு தேவையான ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தனக்கு வாழ்வில் தீமை, கஷ்டம், நஷ்டம் இவைகளை உண்டு பண்ணும் செயல்களையும், பொருட்களையும், உறவுகளையும், நட்பையும், நீக்கிவிடுதல் வேண்டும். நம் வாழ்வின் உயர்வுக்கும், மேன்மைக்கும் நன்மை தருபவனவற்றை மட்டும் பயன்படுத்தி வாழ்பவன் ஞான நிலை அடைந்த ஞானி ஆவான். இதுவே தன்னை பற்றி பூரண ஞானம் அடைந்த நிலை. "தன்னையறிதல் ஞானம் " தன்னையறிந்தவனே ஞானி ஆவான்.
                   ஞானம் என்பது ஏதாவது ஒன்றை பற்றி மட்டும் தெரிந்து கொள்வது ஒரு வகை. இசையை மட்டும் நன்கு அறிந்து அதில் நிபுணராக இருப்பவர் இசை ஞானி, இவருக்கு வேறு ஒன்றைப் பற்றிய அறிவு இராது. கணிதத்தில் மட்டும் மேதையாக இருப்பவர் கணித அறிவை தவிர வேறு ஒன்றும் தெரியாதவராக இருப்பார். சாத்திரம் படித்தவர் தான் ஏட்டில் படித்த, பாடல்களை பற்றிய விளக்கமும், மந்திரங்களை இசையுடன் பாடும் வல்லமை பெற்று இருப்பார். வேறு ஞானம், உலகை பற்றிய தெளிவு இராது. இதைப் போன்று ஏதாவது ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து அதில் பொருள் சம்பாதித்து வாழ்ந்து வருபவர் ஒரு வகை ஞானம் பெற்றவர். ஆனால் பூரண ஞானம் என்பது மனிதன், உயிர், உடல், ஆன்மா, வைத்யம், வானியல், வாசி, ஜோதிடம், பஞ்சபூதங்கள், நவகோள்கள், என அனைத்தையும் அறிந்து, தெரிந்து, புரிந்தவரே, பூரண ஞானி இதுவே பூரண ஞானம். இந்த பூரண ஞானம் பெற்றவர் தான் "பூரண ஞானி" என்று அழைக்கப்படுவார். நமது தேசத்தில் பூரண ஞானம் பெற்றவர்கள் அகத்தியர், 18 சித்தர்கள், இராமலிங்க அடிகள், புலத்தியர், அத்திரி, பட்டினத்தார், பத்ரகிரியார், போன்ற இன்னும் பல ஞானிகள் உள்ளனர். இவர்கள் சகல கலா ஞானிகள் ஆவார்கள். இவர்கள் மரணம் இல்லாபெரு வாழ்வு பெற்று, இன்னும் சூட்சும தேகத்துடன் வாழ்ந்து, நம்மை வழி நடத்தி வாழ்வித்துக் கொண்டு இருகின்றார்கள்.


தொடரும்....

Monday, 8 April 2013

தொடர்ச்சி....


ஞானம் 
              இன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை அடைந்து விட, மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள் என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று ஞானத்தை தேடி, தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
                சைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால் என்ன? இந்த ஞானம் எங்குள்ளது? ஞானம் அடைந்தவன் யார்? பூரணஞானம் அடையும் வழியாது? என எல்லாவற்றிற்கும் தெளிவான, குழப்பமில்லாத எளிதான வழியை கூறியுள்ளார்கள்.
                சித்தர்கள், ஞானம் பெற பக்தி மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று கூறுகின்றார்கள்.
                இன்று கலிகால மக்கள் ஞானம் அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல் மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில் ஞானம் அடைய, தன் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.
                 "தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
                 சார்வாக பாராட்டும் ஞானம் வேறே"
                 மக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு அகத்தியர்.
                 இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பிறக்கும் போது ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும் வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் "மேதை" என்றும், "ஞானம் உள்ளவன்" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும் அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.
                 கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும். ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன் "ஞானி" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.
                 ஞானம் என்பது பிறக்கும் போதே நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள் பெற்றோர்களை, பெரியோர்களை பார்த்து, தன் கண்ணில்படும் ஒவ்வொரு பொருளை பற்றியும், அவை சம்பந்தமான விபரங்களை ஏன்? எப்படி? எதனால்? என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல் நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை அடைய, ஞான முயற்சியில் ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். இன்னும் சில பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர கதைகளை கூறி, தெளிவான உண்மை விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடியாமல், தன் ஞான நிலையை வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி விடுகின்றார்கள்.
                ஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில் முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன் திறமையை உணர்ந்து, அந்த கல்வியை சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன் மேலும் நுட்பங்களை அறிந்து, அதில் ஞானம், திறமை அடையும் காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன் தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக் கொண்டவன், தன் வாழ்வில் யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன் தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில் புகழ் அடைவான். கணித மேதை, விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை. இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வணங்கி பக்தி செலுத்துபவன் ஞானி இல்லை.


தொடரும்....

Saturday, 6 April 2013

தொடர்ச்சி.....
                 உலகினில் பிறந்த எந்த மனிதனும் தன் சுய அறிவு செயல்பட தொடங்கும் வரை, தானே சிந்திக்கும் திறன் உண்டாகும் வயது வரை, தன் முன்னோர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும். இது பல பருவம் ஆகும். அதாவது ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் வயது நிலை ஆகும். இந்த பருவம் பிறர் கட்டுபாட்டில் வாழ்ந்து, பிறர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள காலம். இந்த அறியாப் பருவத்தில் செய்யும் எந்த செயலையும் மனிதன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து செய்வது இல்லை. பக்தி என்பது இதைப் போன்ற ஒன்றுதான்.
                 உலகில் பிறந்த அனைவரும் தன் ஆரம்ப வயதில் இறைவழிபாடு, கடவுள்பக்தி என்ற நிலையை, அது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு, ஈடுபட்டு வாழ்ந்தே ஆக வேண்டிய நிலைதான். இது காலம், காலமாக சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
                 என் குரு சிவவாக்கிய சித்தர் தன் இளம் வயதில் ஞானம் அடைய, தன்னையறிய பக்தி தான் உண்மையாக உதவி செய்யும் என்று நம்பிக்கை கொண்டு இராமனே தெய்வம், "ராம நாம மந்திரம் ஞானம் தரும், முக்தி தரும்" என்று ராமனை வணங்கி வாழ்ந்து வந்தார். பின் இந்த ராம பக்தி மார்கத்தினால் எந்த பலனும் கிட்டாது என்று தெளிந்து "ராமன் என்பதும் பொய், ராமநாம மந்திரம் பொய்" என்று கூறிவிட்டு சிவனை வணங்கி எல்லாம் சிவாயமே என்றார். ஐந்தெழுத்தே ஆன்மாவை அறிய உதவும், சிவனே பெரிய தெய்வம் என்று சிவபக்தி கொண்டு வாழ்ந்தார். இதனாலும் ஆன்மாவை அறிய, தன்னையறியும் நிலை ஏற்படாது என்று அறிந்து "மூல மந்திரம் என்பதும் பொய், மூவரும் பொய்" என்று சிவனை வழிபடுவதை விட்டார். அதுபோல் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் இளம் வயதில் தெய்வங்களை வணங்கி பக்தி செலுத்தி நிறைய பாடல்களை பாடினார், கடைசியில் ஒளி வழிபாட்டை உருவாக்கி, சித்தர்கள் அருளிய "சைவ சித்தாந்த கொள்கைகளை" ஏற்று மகா ஞானம் அடைந்தார். வள்ளலார் கூட இளம் வயதில் வேதாந்த மார்க்கத்தினை ஏற்று கடவுளை வணங்கி வந்த போது சித்தர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், சித்தர்களை குறைவாக மதிப்பிட்டு சில பாடல்களை பாடியுள்ளார் ஆனால் வாழ்நாளில் கடைசி காலத்தில் சித்தர்கள் கூறிய வழியில் வாழ்ந்து அகத்தின் உள்ளே சோதி தரிசனம் பெற்றார். இவர்களை போன்று பட்டினத்தாரும் பக்தி நிலையை விட்டு, சித்தாந்த கருத்தை ஏற்றார். இதைப் போன்று சாகாநிலை பெற்று தன்னை மறைத்துக் கொண்ட அனைத்து ஞானிகளும், சித்தர்களும் மகான்களும் பக்தியை விட்டு கடவுள் வழிபாட்டினை நீக்கி சித்தர்கள் கூறிய சித்தாந்த கொள்கையை கடைபிடித்து வாழ்ந்து தன்னையறிந்தவர்கள்.
                  அனைத்து ஞானிகளும், மகான்களும் இளம் வயதில் ஆரம்ப காலத்தில் கடவுள் பக்தி கொண்டு கடவுளை வணங்கி, மாயையின் வசம் ஆட்பட்டு, பாட்டுபாடி அலைந்தவர்கள்தான் இதனை மறுக்க முடியாது. இந்த மகான்களும், ஞானிகளும் அறிவின் முதிர்ச்சி உண்டாகி, வாழ்வின் அனுபவத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்று 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல்பவர் 5ம் வகுப்பு பாடத்தை விட்டதுபோல் பக்தியை விட்டனர். தன்னையறியும் நிலையை பெற முயற்சித்தனர். உருவ வழிபாட்டை ஒதுக்கினார்கள். பூசை, ஹோமம், யாகம், அர்ச்சனை, அபிஷேகம், கடவுளை போற்றி பாடுவது போன்றவைகளை விடுத்து, வாசி யோகம் பயிற்சி மூலம் தன் சக்தியை வளர்த்தனர் ஞானம் கிட்டியது ஆத்மா சோதி பிரகாசித்தது. இவர்கள் இன்றும் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
                   இன்றைய மக்கள் பட்டினத்தாரும், சிவவாக்கியரும், இராமலிங்க சுவாமிகளும் தாங்கள் அறியாத இளம் வயதில் பாடிய கடவுள் பக்தி பாடல்களை மட்டும் படித்து விட்டு, இந்த மகான்கள் கடவுளை வணங்கியே ஞானமும், முக்தியும் அடைந்தனர் என்று தவறாக எண்ணி வாழ்கின்றார்கள். இவர்கள் பூரண ஞானம் பெற்ற பின் பாடிய பாடல்களை யாரும் படிப்பது கிடையாது. இவர்கள்பாடிய கடவுள்பக்தி பாடல்களையே பத்திரிகைகளும், தொலைகாட்சியும், பட்டிமன்ற பேச்சாளர்களும், பசனை குழுவினரும் இன்னும் பாடிக் கொண்டு மக்களை ஞானம் பெற விடாமல் தடுத்து வருகின்றார்கள். பட்டினத்தாரின் பூரணமாலை படியுங்கள். சிவவாக்கியரின் ஞான பாடலை படியுங்கள். வள்ளலாரின் ஆன்மஜோதி தத்துவ பாடல்களை படியுங்கள் அப்போது தான் ஞானம் அடைய வழி கிட்டும் முக்தி அடையும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
                  இன்றைய மக்கள் பக்தி என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து வாழ்வில் உயர வேண்டும் என்ற முயற்சி இன்றி கடவுள் அருளால் எல்லாம் நடக்கும், பூசை, ஹோமம், தானம், தர்மம், விரதம் இருந்தால், மந்திரம், நாமபாரயணம் செய்தால் எல்லாம் வாழ்வில் கிடைத்து விடும், தடைகள் விலகிவிடும், வாழ்வில் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி வாழ்கின்றார்கள். இந்த பக்தி நிலைப்பாட்டில் வாழும் மக்கள் இன்னும் ஆரம்பபள்ளி பாடத்தையே படித்துக் கொண்டு இருப்பவர்கள் என கூறலாம். இது போன்ற அடிப்படை ஞானமே இல்லாமல் மக்கள் பக்தி ஒன்றையே நம்பி கடைபிடித்து வாழும் மக்கள் இன்றைய உலகில் 90% சதவீதம் பேர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்வில் மேன்மை அடைய பக்தி நிலையை விட்டு ஞான நிலை கல்விக்கு உயர்தல் வேண்டும்.
                   என்குரு அகத்தியர் பக்தி என்று கூறிக் கொள்ளும் சாத்திரம், புராணம், ஆகமம் இவைகளால் எந்த நற்பலனும் கிடைக்காது என்பதை கூறுவதைக் கேளுங்கள்.
                   வேதமென்ற ஆகமங்க ளாறு சாத்திரம்
                                    வெவ்வேறு மதபேதம் சமய பேதம்
                    காதமென்ற சாதியும் நாள் பதினெட்டாகக்
                                     கருத்துவமா யுலகோரை மயக்கங் காட்டிக்
                    கீதமென்றா லரிகீதம் சிவகீத மென்றும்
                                     கிருபையுடன் வெவ்வேறாய் பிரித்துக் காட்டிப்
                    பாதமென்று சாவதுவே நிசந்தா  னென்று
                                      பாடினார் சாத்திரத்தை பாடினாரே-என்கிறார்.
                    நான்கு வேதம், ஆறு சாத்திரம், ஆகமம், பல மதம், சாதி, சமயம் பதினெட்டு புராணங்கள், அதற்கு விளக்கம் தரும் அகராதி நூல்கள், இவைகள் எல்லாம் இந்த உலகத்தில் உள்ள மக்களை மயங்க செய்வதற்காக, புத்தி, அறிவு மழுங்க செய்வதற்காக உண்டாக்கப்பட்டது. மேலும், அரிஎன்ற பெருமாளைப்பற்றி வைஷ்ணவர்களுக்கு ஒரு மந்திரம், சிவனுக்கு ஒரு மந்திரம், இது போல் வெவ்வேறு தெய்வங்களுக்கும் பூசை, அபிஷேகம் என ஆகமமுறைகள். இவைகள் சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அப்படி கடைபிடித்து வணங்கி வந்தாலும் வாழ்வில் கஷ்டம், பிரச்சனை வறுமை தீராது. பிறந்தவர்கள் இறந்து போவது மட்டும் உண்மை என்று கூறிவிட்டார்கள். இதுவே கடவுளை வணங்குவதால் உண்டாகும் கடைசி பலன் இந்த வேதாந்தம் கூறும் கடவுள் வழிபாடு உன்னை மரணத்தில் இருந்து காப்பாற்றாது, ஞானம் அடைய உதவாது. தன்னையறியும் நிலையை தராது என்கின்றார் என் குரு அகத்தியர்.


தொடரும்......