Monday, 24 December 2012

தொடர்ச்சி...

தற்போது இது போன்ற ஆடம்பர ஆன்மீகம் செய்யும் போலி குரு              மார்களிடம்  வியாபார போட்டி அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு குருவும் தொலைகாட்சியிலும், வாரப் பத்திரிக்கைகளிலும், வானொலி மூலமும், வசதி உள்ளக் குருமார்கள் தங்கள் மடத்தின் பெயரில் சொந்தமாக புத்தகம், பத்திரிக்கை வெளியிட்டும் தன்னைப்  பற்றி கற்பனை கதைகளை  எழுதியும், மக்களை ஏமாற்றி பணம் பறித்துக்  கொண்டு, தங்கள் வாழ்வை சுகமாக அமைத்து கொள்கின்றார்கள்.

இன்றைய  கலி காலத்தில் தன்னை குரு என்று கூறிக் கொள்பவர், எப்படி இருப்பார்கள் என்பதை என் குரு கொங்கணசித்தர் அன்றே கூறியுள்ளதை  கேளுங்கள்.

             குருடான செத்தெழுத்தை யுபதேசிப்பான்
                       கூறு கெட்ட பாவிசெய்த கொடுமை ஐயோ
             திருடான மருளன் பூரணமே யென்பான்
                       தீர்த்த மென்பான் கொவிலென்பான் தெய்வமென்பான்
             மருடான மருடனப்பா மயங்கி மாள்வான்
                       மனதார உபசாரக் காரஞ் செய்யமாட்டான்
             அருளான அருளைனைப்போற் பரமே யென்பான்
                       அம்பலத்தை காணாத அசடனாமே - என்கின்றார்

இந்த போலி குருமார்கள் ஒன்றுக்கும் உதவாத நான்கு ஐந்து எழுத்துகளை கூறி தீட்சாமந்திரம் என்பான். தீட்சை என்பான், இவன் திருடனாவான். தன்னை நாடி வருபவர்களிடம் புண்ணிய தீர்த்தம், முக்தி தரும் தலம் என்று ஏதாவது  பொய்க் கதைகளை கூறுவான். இதனை கேட்பவர்கள் இவன் பேச்சு சாமர்த்தியத்தால் இவன் கூறுவதை கேட்டு மயங்கி விடுவார்கள்.  இவன் கேட்கும், பொருள், பணத்தை தந்து விடுவார்கள். ஆனால் இந்த குரு பிறருக்கு மனதார உபகாரம் நன்மை செய்ய மாட்டான். பெரிய அருள் சக்தி  தன்னிடம் உள்ளது போல் வெளியில் காட்டிக்  கொள்வான். இவன் ஆன்மா  இருக்கும் இடம் தெரியாத அசடன் என்கின்றார் என்குரு .


                                                                                                                      தொடரும் ....

Tuesday, 11 December 2012

ஆடம்பர ஆன்மீகம்

தொடர்ச்சி ...

       இன்னும் ஒரு சிலர் யோககலை கற்று தருதல் , ஞான உபதேசம் செய்தல், தியானம் கற்பித்தல், வாழும் கலை உபதேசம் தருதல், என்று  உடற்பயிற்சி நிலையத்தை உலகமெல்லாம் நடத்தி, மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் குருமார்கள் ஒரு பக்கம்,  இன்னும் சில தனி நபர்கள் ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக மாநாடு, என கடவுள் பெயரை, நவக்கிரகங்கள் பெயரை கூறி         உலக நன்மைக்காக பூசை, யாகம், ஹோமம், என்று கூறி பணம் பறித்தல், சிலர் அருள்வாக்கு, அன்னதானம் அறக்கட்டளை, கல்விதானம் என்ற பெயரில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்து  மக்களிடம்  பணம், பொருள் வசூல் செய்து  ஏமாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றனர்.

       இது போன்ற போலி குருமார்களை பின்பற்றும் சீடர்களும், மக்களும், தன்  குருமார்களுக்கு விழாக்கள் எடுத்தல், விழாவில் மலர்பாதை, மலர்கீரிடம், சிவப்பு கம்பள மரியாதை, அலங்கார மேடை, சிம்மாசனம், என செய்து அலங்காரமாக, ஆடம்பரமாக தங்கள் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.  இதனை செய்து முடிக்க வரவேற்பு குழு, வசூல் செய்யும் குழு, விருந்து குழு, விழாமேடை பொறுப்பு  குழு, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுவரொட்டி விளம்பர குழு என அமைத்துக்  கொண்டு, ஏமாறும்  பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து,  அதில் ஆயிரக் கணக்கில் செலவு செய்து,  நடத்தும் இந்த ஆடம்பர ஆன்மீக செயல்கள், துளி கூட ஆன்மீகம்  சம்பந்தப்பட்டது அல்ல.  இதனை ஒரு பொழுது போக்கு விழா என்று கூறலாம்.  இந்த போலி குருமார்கள் மக்கள் தங்களை மறந்துவிடாமல் இருக்க யாத்திரை என்ற பெயரில் தேசம் முழுவதும் சுற்றிக் கொண்டு பணம், பொருள் என மக்களிடம் வசூல் செய்து கொண்டு இருப்பார்கள்.  இந்த ஆன்மமீக வியாபாரம் நடத்தும் ஆன்மீக வியாபாரிகள்.


                                                                                                                             தொடரும் ....