Saturday, 30 March 2013

அருவருப்பு ஆன்மீகம்


                ஆன்மீகம் என்ற பெயரில் இன்னும் சிலர் செய்யும் செயல்கள், பார்பவருக்கு மனதில் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கும். இந்த பிரிவினர் மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் என கூர்மையான ஆயுதங்களை தன உடம்பில் குதி கொள்ளுதல், நிர்வாண பூசை நடத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் என்ற பெயரில் உடம்பு முழுவதும் ஊசிகுத்துதல், உயரத்தில் தொங்குதல், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், கத்தியால் கீரிக்கொள்தல், ஆடு, கோழி இவைகளை பலியிட்டு கோவிலை சுற்றி ரத்தக் களறி ஆக்குதல், இவைகளை துடிக்கத் துடிக்க கடித்து பச்சை ரத்தம் குடித்தல் போன்ற இன்னும் பல செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் செய்துவருவார்கள்.
                 இவர்களுக்கு இந்த ஆன்மீக செயல்களை செய்ய வழி காட்டுபவர்களை பூசாரிகள், கோடங்கிகள் என்று கூறுவார்கள். இந்த பாமரமக்களுக்கு யாகம், ஹோமம், வேள்வி இவைகளில் அவ்வளவாக நம்பிக்கை இராது. இவர்களுக்கு என்று ஒரு கோயில், ஒரு தெய்வம், அதற்கென்று ஒரு வழிபாட்டு முறைகள் உண்டாக்கப்பட்டு வழிபட்டு வருவார்கள். இவர்கள் வணங்கும் தெய்வங்களை குலதெய்வம், கிராம தெய்வங்கள்,எல்லை தேவதைகள் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் துர்தேவதைகளையே தெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள்.
                   இது போன்ற அருவருப்பான செயல்களை "ஆன்மீகம்" என்ற பெயரில் ஏழை எளிய மக்கள் செய்து வருகின்றார்கள். இதுவும் ஆன்மீகம் அல்ல, என உணருங்கள்.
                    இவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                     தங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்
                     பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பூசை பலியை இட்டிட
                      நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
                      உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே -
என்கிறார்.
                      உலக மக்களே நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள அம்மன், பிடாரி, கருப்பு தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி, என முப்பூசை இட்டாலும் அதனால் நோய், பிரச்சனை, கஷ்டம் தீராது. ஆனால் இந்த உயிர்களை கொன்ற பாவம், உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும். மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
                     கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
                      நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட
                      வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட
                      தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே
                       நீங்கள் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோறும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து, உன்னை வெம்ப வைத்து, மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம், பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குல தெய்வம் என்பது குடியை கெடுக்கும் செத்த தெய்வம் ஆகும் என்கின்றார்.
                       இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும்  ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தல் ஆன்மீகம்
                      இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் என்பது தற்காலத்தில் தன்னை நம்பி வரும் மக்களை ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தி பணம், பொருள் இவைகளை ஏமாற்றி வாங்கும் போலி குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் கோயில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், ஏதாவது ஒரு சித்தரை, ரிஷியை வணங்கி வாக்கு சொல்கின்றேன் என கூறும் போலி ஜோதிடர்கள் மருளாளிகள், சாமியாடிகள், ஏவல், பில்லி, சூனியம் என கூறி பிழைப்பு நடத்தும் மந்திரவாதிகள், போன்ற நபர்கள் கடைபிடித்து வரும் ஆன்மீகம் ஆகும். தன்னை நம்பிய மக்களை, பக்தர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பவர்களின் தந்திர வழி ஆன்மீகம் இது.
                     இந்த போலி நபர்கள் தன்னிடம் கஷ்டம், பிரச்சனை என்று வரும் மக்களிடம் உங்களுக்கு தெய்வ குற்றம் உள்ளது.  யாரோ ஏவல், சூனியம் வைத்துவிட்டார்கள். உன் வீட்டில் துஷ்ட சக்தி உள்ளது. நீ பிறருக்கு துரோகம் செய்துவிட்டாய், என எதையாவது ஒன்றை சொல்லி, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லையேல் கஷ்டம் தீராது, மகப்பேறு கிடைக்காது, நோய் தீராது என கூறி பயமுறுத்தி விடுவார்கள். இன்னும் சிலர் கோதானம் செய், அன்னதானம் செய், இந்த மலைக்கு போ, காசிக்கு போ, ராமேஸ்வரம் போ, என்பார்கள். சிலர் ஓலையில் வந்தது, நாடியில் வந்தது, அருள் வாக்கில் வந்தது என எதையாவது கூறி, பாமர மக்களை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் பறித்து விடுவார்கள்.
                     இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் சில போலி நபர்கள், மக்களை ஏமாற்றி பணம் பறிக்க உதவுமேயன்றி மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை தீர்க்க உதவாது. மேலும் இந்த போலி குருமார்கள், வாக்கு சொல்பவர்கள் தீட்சை மந்திரம், நம்பர்பிளேட் எழுத்து போட்டு கோலம் வரைந்த அட்சரதகடுகள், தாயத்துகள், வாஸ்து என்ற பெயரில் ஏதாவது பொருட்கள், பொம்மை என கொடுத்து பணத்தை பிடுங்கி விடுவார்கள். இந்த பொருட்களை வைத்து வணங்குவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                     ஆன்மீகம் என்ற பெயரில் இவ்வளவு பிரிவுகளை மக்கள் கடைபிடித்து வாழ்ந்து, ஏமாந்து வருகின்றார்கள்.
                      ஆன்மீகம் என்பது ஊர், ஊராக அலைந்து திரிந்து, காடு, மலை, ஏறி, கடல் நீரில் குளித்து, கடவுளை வணங்கி, பாட்டுபாடி குருவை பாத பூசை செய்து, பூசை, யாகம், அபிஷேகம் செய்து அலைவது, தீட்சை பெற்று மந்திரம் சொல்லி ஆன்மீகத்தை அடைய முடியாது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                      என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                      நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய்
                      கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய்
                      எட்டு திக்கு தேவரும்பொய் ஏழிரண்டு லோகமும் பொய்
                      மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே.
                      பூசையும், தேவரும், புராணமும், தெய்வமும், வேதமும் பொய்யானது. நம் அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே, அதாவது தன்னை உணர்தலே ஆன்மீகம் என்கின்றார்.
                      என்குரு பட்டினத்தடிகள் கூறுவதை கேளுங்கள்.
                      என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
                      உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே.
                      வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
                      தானேன்பார் வீணர் தனையறியார் பூரணமே.
                      ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
                      என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே.
                      நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
                      வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே.
                      வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துணைத்தான் போற்றாமல்
                      காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே.
                      உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
                      கடல் மலைதோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே - என்று கூறுகின்றார்.



தொடரும்.......









Friday, 29 March 2013

அலங்கார - அந்தஸ்து ஆன்மீகம்


                      இன்றைய நாட்களில் மக்களில் ஒரு பகுதியினர், ஆன்மிகம் என்பது தன்னுடைய அந்தஸ்தை, கௌரவத்தை வெளிப்படுத்தி, மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும். சமூகத்தில் மரியாதை அடைய வேண்டும் என எண்ணி ஆன்மிகம் என கூறி சில செயல்களை செய்து வருன்கின்றார்கள். இது ஆடம்பர, அலங்கார ஆன்மிகம் பணம் வசதி கொண்ட செல்வந்தர்கள் கடைபிடிக்கும் ஆன்மீக பாதையாகும் இவர்கள் தங்களிடம் உள்ள பணவசதியால் கோவிலை அலங்கரித்தல் கோவில் குடமுழுக்கு செய்வது, கோவில்களுக்கு பொருட்களை வாங்கி தந்து உபயம் என்ற பெயரில் தங்கள் பெயர்களை விளம்பர படுத்திகொள்வது , தேர், திருவிழா என்ற பெயரில் சாமியை அலங்காரம் செய்து, மக்களை கூட்டி விழா நடத்துவது, அதில் தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து தட்டி, கட் அவுட் என வைத்து கொள்வது, "திருவிளக்கு பூசை" என்ற பெயரில் பட்டுசேலை, பவுன் நகைகளை அணிந்து, மக்களிடையே தங்கள் செல்வநிலையை, அந்தஸ்தை வெளிப்படுத்தி கொள்வது போன்ற செயல்களை செய்து, தங்களை பெருமைபடுத்தி மனம் சந்தோஷப்படுவார்கள்.
                     இன்னும் சில பேர் தங்கள் அந்தஸ்து, கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள அறங்காவலர், அறங்காவல் குழு தலைவர், தக்கார், பரம்பரை கோயில் உரிமை, என பதவிக்கு போட்டி போடுவது, இதில் எதாவது தடை, பிரச்சனை ஏற்பட்டால் வழக்கு போடுவது, ஒற்றுமையான மக்கள் இடையே கோஷ்டி உண்டாக்கி பிரிவினையை உண்டு பண்ணுவது, கலவரம் செய்வது, கோவிலை மூடுவது, கடவுள், ஆன்மீகம் என்ற பெயரால் அர்ச்சகர், பூசாரிகளிடம் பணம் கொடுத்து பரிவட்டம், முதல் மரியாதை பெறுவது போன்ற செயல்களை செய்து கொண்டு வாழ்வார்கள். இது ஆன்மீகம் அல்ல. இந்த "அலங்கார ஆன்மீகம்" என்ற பெயரில் எவ்வளவு பணம், பொருள் செலவு செய்து கோவிலில் கடவுளை வணங்கிய போதும் தன்னையறிய முடியாது. தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்த்து கொண்டு உயர்வு அடைய முடியாது.
                     இது போன்ற தன் சுய கௌரவத்திற்காக செலவு செய்து "ஆன்மீகம்" என்ற பெயரில் வாழ்பவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
1.                  கல்லு கட்டை சாணி மண்ணு காராயிந்தூர செம்பில்
                     கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
                     மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த போதினும்
                     இல்லையே கதிபெறவும் ஏமனுப் பிணங்களே.

2.                  திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
                     ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
                     வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
                     பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே
                     -என்கின்றார்.
                     கல் சிலை, கட்டையில் சிலை, சாணியில் பிள்ளையார், மண்ணில் சிலை, இரும்பு, செம்பு, ஐம்பொன், உலோகங்கள் என எந்த பொருளில் கொல்லனிடம் கொடுத்து, கடவுள் சிலைகள் செய்து, கோயில் உள்ளே வைத்து கும்பிட்ட போதும், மிகவும் சிரமப்பட்டு, பெரும் பொருள், பணம் செலவு செய்து, எதிர்ப்புகள் இருந்த போதும், அவைகளை தடுத்து திருவிழா, விசேஷம், உற்சவம் என எதை செய்தாலும் உன் விதியை மாற்ற முடியாது. வாழ்வில் தடைகளை நீக்க முடியாது. நீவணங்கும் கடவுள், நீ அனுபவிக்க வேண்டியதை தடுக்க முடியாது. கடைசியில் நீயும் விதியை அனுபவித்து, வாழ்ந்து, எமனுக்குத்தான் பிணமாய் போவாய், தன்னையறிந்தால் மட்டுமே நீ நற்கதி அடைய முடியும். செல்வத்தால் செய்யும் கடவுள் வழிபாடு உனக்கு நற்கதியை தராது என்கிறார். இவர்கள் கடவுளை வணங்கிக் கொண்டே இருப்பவர்கள் ஆனால் கஷ்டம் தீராது. மேலும், மேலும் வாழ்வில் கஷ்டம் அதிகமாகும்.

                     இதுபோன்ற செலவுகளை ஆன்மீகம் என்ற பெயரில் செய்வதை விட்டுவிட்டு யாருமற்ற ஏழை குழந்தைகட்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்தால் பேருலகை அடையலாம் என்கிறார் என்குரு.
                     இந்த ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பெயரில் பக்தி செலுத்தி இதனை பின்பற்றி வாழும் மக்கள் இருள் உலகில் வாழும் இருள் மனம் கொண்டவர்கள் எனலாம்.

அலங்கோல - அமங்கல ஆன்மீகம்
                   இன்றைய   காலத்தில் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும், ஒரு தெய்வத்தை வழிபாடு செய்கின்றோம் என்று கூறி கொண்டு, ஆயிரக்கணக்கான தெய்வங்களை அங்கங்கே உருவாகி உருவாக்கி, ஆகமம் என்ற பெயரில் ஒரு சில பூசை விதிகளை நிர்ணயம் செய்து கொண்டு, முருகனுக்கும், சிவனுக்கும் காவி உடை, ஐயப்பனுக்கு கருப்பு உடை, நீல நிற உடை, அம்மனுக்கு சிவப்பு உடை என பள்ளி சிறுவர்கள் போல் சீருடை அணிந்து கொண்டும், ஆண்கள் தாடி, மீசை, சடை முடிவைத்துக் கொண்டும், பெண்கள் பூவைக்க கூடாது, பொட்டு வைக்ககூடாது ஒரு குறிப்பிட்ட உணவு தான் உண்ண வேண்டும், தினமும் பசனை செய்ய வேண்டும், என பல செயல்களை செய்துவருவார்கள். இன்னும் சிலர் பிரார்த்தனை என்ற பெயரில் மிருகம், கடவுள் என வேடம் தரித்துக் கொள்தல், கரும்புள்ளி, செம்புள்ளி என சரீரத்தில் குத்தி கொள்தல் வேப்பிலையை ஆடையாக தரித்துக் கொள்தல் போன்ற செயல்களை செய்து, தங்கள் உருவத்தை தாங்களே அலங்கோல படுத்தி கொள்வார்கள்.
                  இந்த அலங்கோல ஆன்மீகத்தை மக்களுக்கு கூறி வழி நடத்தும் போலி நபர்கள், சித்தர்பீடம், சக்தி பீடம், என வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பணம் பறிப்பார்கள். இந்த போலி நபர்கள் அம்மாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் குறி சொல்லுதல், வாக்கு சொல்லுதல் என எதையாவது கூறி அதற்கு பரிகாரம், பிராயசித்தம் என்ற பெயரில் இந்த பாமர மக்களை ஏமாற்றி தன் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்வார்கள்.
                   இது போன்ற செயல்களை நம்பும் மக்கள், இந்த போலி நபர்களிடம் சக்தி உள்ளதாக எண்ணிக் கொண்டு தான் ஏமாறுவது தெரியாமல் ஏமாந்து கொண்டு இருப்பார்கள். இந்த மக்களை சிறு தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்று மற்றவர்கள் கூறுவர். இது போன்ற வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல. பக்தி என்ற பெயரால் தங்களை ஏமாற்றி கொள்தல் ஆகும். இந்த அலங்கோல பக்தி முறையாலும் தன் வாழ்வின், கஷ்டம், பிரச்சனை, இவைகளை தீர்க்க முடியாது.


தொடரும்.......

Thursday, 28 March 2013

 இன்னும்  என்குரு கொங்கனசித்தர் இந்த போலி குருமார்களை பற்றி கேளுங்கள்.

பூரணம் நிற்கும் நிலையறி யான்
                 பொய்சொல்வான் கொடிமந்திரஞ் சொல்வான்
 காரணகுரு அவனுமல் லவிவன்
                 காரிய குரு பொருள் பறிப்பான்
எல்லாமறிந்தவ ரென்றுசொல் லியிந்தப்
                 பூமியிலே முழுஞானி யென்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே
                 ஓடித்திரிகிறார் வாலைப் பெண்ணே - என்கிறார்.

                 கலிகால போலி குருமார்கள் முழுமையான ஞானம் எப்படி அடைய வேண்டும்? ஆன்மா என்றால் என்ன? என்று அறிய மாட்டான். ஆன்மீகம் என கூறி பல கோடி விளக்கங்களை, பொய்யான மந்திரங்களை கூறுவான். இதனை தன் பக்தர்களுக்கு கூறி பொருளை, பணத்தை ஏமாற்றி பறித்து கொள்வான். தனக்கு எல்லாம் தெரியும், நானே பெரிய ஞானி, என்பான். இவன் மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை ஆராய்ந்து எப்படி ஏற்பட்டது என்று காரணத்தை கூறும் பிறரிடம் பொருளை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் காரிய குரு இவன். இவன் உல்லாச வாழ்க்கை வாழ ஊர், ஊராக சென்று மக்களை ஏமாற்றி, பணம் பறிப்பவன் என்று புரிந்து கொள் என்கிறார் குரு.

                இன்னும் இந்த கலி கால போலி குருமார்களைப் பற்றி என்குரு காகபுசுண்டரிஷி கூறுவதை கேளுங்கள்.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
                பணம்பறிக்க உபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரம்மநிலை காட்டா மற்றான்
                ஆகாச பொய்களையும் மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்கு பாவமாச்சு
                 நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சி
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
                 விதியாலே முடிந்த தென்று விளம்பு வானே - என்கிறார்.

                 இன்றைய கலிகால போலி குருமார்கள் ஊர், ஊராக சென்று, மக்களை விளம்பரபடுத்தி அழைப்பான். ஞான உபதேசம், பிரம்மநிலை, அறிதல், யோக பயிற்சி, நல்வாழ்வு அடைய உபதேசம், வாழ்வில் உண்டாகும், பிரச்சனை, கஷ்டம், வறுமை தீர வழிகாட்டுதல் தவம், தியான பயிற்சி, வகுப்பு என கூறி பறிப்பான். ஆனால் வாழ்வில் ஏற்படும் கஷ்டம் தீர வழிகாட்டமாட்டான் நம்ப முடியாத ஆகாய பொய்களையும், புராண இதிகாச கதைகளையும் கூறி ஏமாற்றிவிடுவான். இவனை நம்பி செல்லும் சீடனுக்கும், பக்தனுக்கும், மக்களுக்கும் மேலும், மேலும் பண விரையமும், பாவமும் தான் சேரும் இந்த குருவிற்கு சாபதோஷம் உண்டாகும். இவன் உடல், உயிர், ஆன்மாவின் தத்துவம் தெரியாதவன், பிறப்பும், வாழ்வும், இறப்பும் எதனால் என்று கேட்டால் இது "விதி" படி நடந்தது என்று கூறி விதியை காரணம் காட்டுவான்.

                  இந்த போலி குருமார்களை நம்பி பின்செல்லும் சீடனும், பக்தர்களும், மக்களும் பணத்தை இழப்பார்கள். இவர்கள் ஆன்மாவையும் அறிய மாட்டார்கள், தன்னையும் அறிய மாட்டார்கள். இந்த போலி குருமார்களை நம்பி பின்னால் அலையும் சீடனும், பக்தனும் வாழ்வில் உயர்வை அடைய மாட்டார்கள். ஆனால் இந்த போலி குருமார்கள் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பர வாழ்வு கௌரவம் என அடைந்து விடுவார்கள். இவர்கள் நம்பும் சீடனை நர குழியில் தள்ளி விடுவார்கள்.


தொடரும்......