Tuesday, 2 April 2013

 தொடர்ச்சி ........
                    நமது ஞான சித்தர்கள் "அகத்தில் உள்ள ஆன்மாவை அறிதலே ஆன்மீகம்" என்று கூறுகின்றார்கள். "தன்னையறிதலே ஆன்மீகம் அறியும் பாதை" என்று கூறுகின்றார்கள். தன்னையறிதல் என்பது தன் குணம், மனம், நடத்தை இவைகளை அறிந்து சரிபடுத்தி கொள்ளுதல் தன் வாழ்வின் பிரச்சனைகளை தானே தீர்த்துக் கொள்ளும் சக்தியை அடைதல், தன் ஊழ்வினை விதியை அறிந்து வாழ்தல், வாழ்வில் வீழ்ந்து விடாமல் காத்துக் கொள்ளுதல் உலகில் பொய்மையை அடையாளம் காணுதல், உண்மையை அறிதல், புரிதல், தெளிதல், என்ற நிலைப்பாட்டுடன் வாழ்தல், போலி நபர்களை, அடையாளம் கண்டு விலக்குதல், போன்ற செயல்களை, சரியாக அறிவின் திறத்தால் தன் வாழ்வில் அறிந்து கொள்ளுதலே ஆன்மீக வெற்றியாகும்.
                   இதைவிடுத்து ஆன்மீகம் என்ற பெயரில் இன்று உலகில் உலாவரும் போலி குருமார்கள், ஞான, யோக பயிற்சி தரும் நிலையங்கள் வைத்து பணம் பறிக்கும் நபர்கள், பக்தி என்ற பெயரில் ஏமாற்றி திரியும் ஆனந்தாக்காள், சாமியார்கள், பாவ, சாபவினை தீர்க்கின்றேன், வாழ்வில் தடை நீக்குகின்றேன், விதியை மாற்றுகின்றேன் என்று அருள்வாக்கு, ரிஷிவாக்கு, சித்தர் வாக்கு என கூறும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் பணம், பொருள் கொடுத்து ஏமாறாதீர்கள்.
                    ஆன்மீகம் என்பது கடவுள் கடவுள் பக்தி, வழிபாடு, திருவிழா, பூசை, ஹோமம், யாகம், மந்திரம் கூறுவது, அல்ல. பல பேர் சேர்ந்து கூட்டு வழிபாடு செய்வது அல்ல. இவைகள், உண்மையான ஆன்மீக வழி அல்ல. ஆன்மீகம் என்பது தனி மனித முயற்சி ஆகும். தன்னையறிதலே ஆன்மீகம் அகத்தில் உள்ள ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்.
                     அகத்தில் உள்ள ஆன்மா இருள், மருள், தெருள், அருள் என்ற நான்கு நிலைகளை உடையது.
1. ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பக்தி நாட்டம் கொண்டவர்கள் இருள் நிலையில் வாழும் மக்கள்.
2. அச்சுறுத்தல் ஆன்மீகம், அவலட்சணம், அலங்கோல ஆன்மீகப் பாதையில் வாழ்பவர்கள் மருள்நிலையில் வாழும் மக்கள்.
3. போலியான ஆன்மீக செயல்களை செய்யாமல், தன்னை மட்டுமே சிந்தித்து வாழ்பவர்கள் தெருள்நிலை மக்கள் என கூறலாம். ஆனால் ஞானம் என்பது இவர்களிடம் இராது.
4. தன்னியறிந்து வாழ்பவர்கள், இயற்கையின் உண்மை தத்துவத்தை புரிந்து வாழ்பவர்கள். அருள் நிலையில் வாழ்பவர்கள். இவர்களால் உலகம் நன்மை பெற்று நாட்டையும், மக்களையும் நன்மையடைய செய்வார்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர், ஆன்மாவை அறிந்த ஞான மனிதர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். விளம்பரபடுத்தி கொள்ள மாட்டார்கள்.
                      ஆன்மாவை அறிய அறிய போலி குருமார்கள் விலக்கி, பதினெட்டு சித்தர்கள் அருளிய "சைவசித்தாந்த கொள்கைகளை" கடைபிடித்து இருள்நிலை நீக்கி, மருள் குணம் மாற்றி, தெருள் நிலை உணர்ந்து, அருள் ஞான வழியில் வாழ்ந்தால், அகத்தில் உள்ள ஆன்மா நம்முடன் பேசும். ஆன்மீக முயற்சி வெற்றி கிட்டும், வாழ்வில் பேரும், புகழும், செல்வமும் குறையாது கிட்டிடும். ஆன்மா வழிகாட்ட ஆரம்பித்து விட்டால் விதிவிலகும் அரசனை போன்ற வாழ்வு அமையும்.
                        அன்பர்களே சித்தர்கள் காலமாக இருந்தாலும், இன்று நாம் வாழும் காலமாக இருந்தாலும் "ஆன்மீகம்" என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள தமிழ் தேச சித்தர்கள் அருளிய "சித்தாந்தம்" ஒரு பாதையை காட்டுகின்றது. வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் "ஆரிய வேதாந்தம்" ஒரு வழியை கூறி இதுவே ஆன்மீக பாதை என்று கூறுகின்றது.
                          தமிழ் தேசத்தை சேர்ந்த பதினெட்டு சித்தர்கள் கூறும் சைவ தமிழ் சித்தாந்த கோட்பாடுகள், ஆன்மாவை அறிய கூறும் வழிமுறை, நெறிமுறைகள், தற்போது கடவுள் பக்தி இல்லாத, நாத்திக கொள்கை கொண்டவர்கள் கூறுவது போன்ற, கருத்துக்களை கொண்டது போல் தோன்றும் வேதாந்தம் கூறிய வழியில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவோர் ஆன்மீக வாதி என்றும் "ஆரிய வேதாந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்பவன்" நாத்திகவாதி வாதி என்றும் தற்காலத்தில் மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது.
                         இந்த நாத்திகம், ஆத்திகம் என்ற பெயர், பிரிவினை வாதங்கள் இடைப்பட்ட காலத்தில், பிற்காலத்தில் சுயநலமிக்க சிலர், தங்கள் சுயநலத்திற்காக மக்களை பிரித்து வைத்த சூழ்ச்சியான செயல் ஆகும். வேதம், புராணம், சாத்திரம் என மாயாவாதங்கள் பேசும் மத வாதிகள் மக்களை ஏமாற்றி, தாங்கள் பிழைப்பதற்காக ஆத்திகம், நாத்திகம் என கூறி மக்களிடையே கருத்துக் குழப்பங்களை, சாதி, இன, பிரிவினை சண்டைகளை உண்டாக்கி, மக்களை ஏமாற்றி பிழைத்து வருகின்றார்கள்.
                          சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த ஆத்திகம் கிடையாது. நாத்திகமும் கிடையாது. அன்றும் மக்கள் இடையே இருந்தது, சித்தர்களின் சைவ சித்தாந்த வழி வாழ்க்கை முறை, ஆரிய வேதாந்த வழி வாழ்க்கை முறை என இரண்டு வகைதான். ஒரு மனிதன் ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும் என்பது சித்தாந்த வழி, ஞானம் அடைய வேதம், புராணம், சாத்திரம் கூறிய வழியில் வாழ சொல்வது, ஞானத்தை, ஆன்மாவை வெளியில் தேட சொல்வது ஆரிய வேதாந்த முறை ஆகும்.
                         இன்றைய காலத்திலும் ஆத்திகம், நாத்திகம் என இரண்டு பிரிவு கிடையாது. இவைகளில் உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைய மனிதர்கள் இடையே மாயை மறைந்து இருப்பது உண்மை. ஞானத்தெளிவு இல்லாமல் இருப்பது மட்டும் உண்மை.
                         இன்றைய மனிதர்கள் இடையே சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த கொள்கைபடி தனக்குள்ளே தன்னை தேடுபவன், தன் விதியை, தன் வாழ்வின் நிலையை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் ஏமாற்றுகளை புரிந்து கொண்டு, கடவுளை போன்ற வேறு சக்திகளை நம்பாமல், தன்னையும், தன் உழைப்பையும்,தன் விதியையும் உணர்ந்து வாழ்பவன், சித்தர்கள் கொள்கைகளை ஏற்று, அவர்கள் கூறியபடி தன்னையறிந்து வாழ்பவன் நாத்தீகன் என்று கூறலாம். இந்த சைவ சித்தாந்த கொள்கைபடி வாழும் நாத்தீகன் எப்படி இருப்பான் என்பதை என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே கூறி அடையாளம் காட்டி உள்ளார்.
                         தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்            
                         தன்னை யரியாதவரே தன்னை காட்டுவார்
                         பின்னை யொரு கடவுளை பேண நினையார்
                         போரொளியை பேணுவார் ரென்றாடாய் பாம்பே
என்று கூறியுள்ளார். இது சித்தாந்தம் கூறும் வழி வாழ்பவன் நிலை.
                         ஆரிய வேதாந்தம் கூறும் மாயாவாதம் பேசி, ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து கொள்ள, தன் விதியை மாற்றிட, தன் ஆன்மாவை பூசை, யாகம், வழிபாடு என மாயையின் துணை கொண்டு, வெளியில் தேடி அலையும், வேதாந்த கொள்கை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன என்பதையும் என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே அடையாளம் காட்டி
                           ஏட்டு சுரைக் காய்கறிக் கெய்திடாது போல்
                           எண்டிசைதி ரிந்துங்கதி யெய்தலிலையே
                           நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
                           நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.
என்று வேதாந்திகளை பற்றியும் கூறிவிட்டார்.
                           எனவே நாத்திகம், ஆத்திகம் என்பது பிரச்சனைக்குரிய வாதம் அல்ல தற்போது நடைபெற்றுக் கொண்டு இருப்பது ஞானத்திற்கும், மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.
                           இப்போது உங்களுக்கு புரியும் நாத்திகமும், ஆத்திகமும்,சித்தாந்த ஞானமும், வேதாந்த மாயையும்.

                           "சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்"


தொடரும்.......

1 comment: